நீ அழுதால் பொறாது என் நெஞ்சு…?

இனி எதிர்பார்ப்பதற்கு ஏதுமில்லை என நம் நெஞ்சு நம்மோடு சொன்னாலும் எல்லாம் முடிந்ததாக நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் சாத்தியக் கூறுகள் எங்கே முடிகின்றனவோ அங்கிருந்து ஆரம்பிக்கிறார் நம் ஆண்டவர் !

துன்பங்களும் துயரங்களும் எல்லாரது வாழ்க்கையிலும் சகஜம்தான். ஆனால் அவற்றை இருவகைகளில் எதிர்கொள்ளமுடியும். முதல் வகையினர் துன்பங்கள் நேரும்போது பரிதவித்துப் பதறியடிக்கின்றனர். அழுதரற்றி நிராசையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இனி உய்யுமா என்றறியாமல் ஆதங்கப்படுகின்றனர். மீள முடியாத பாதாளத்தில் விழுந்துவிட்டோம் எனப் புலம்புகின்றனர். மகிழ்ச்சியின் நாள்கள் என்றென்றைக்குமாய் மறைந்து போயின என நினைக்கின்றனர். கடுமையான தனிமையும் விலகாத கவலையும் இவர்களை ஆட்டிப்படைக்கின்றன.

ஆனால் இரண்டாம் வகையினர் பிரதிகூல நேரங்களிலும் நிலைதடுமாறுவதில்லை. நம்பிக்கையை இழப்பதில்லை. அலைக்கழிக்கும் புயல்காற்றும் இவர்களை ஒன்றும் செய்துவிடுவதில்லை. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பசுமை மாறாத இலைகளுடன் அசைந்தாடும் சிலவகை தாவரங்களைப் போல் இவர்களும் மகிழ்ந்தாடி இறும்பூது எய்துகின்றனர். வெப்பம் வெதும்புகின்ற மணற்காட்டிலும் கூட இத்தகைய தாவர இனங்களைக் கண்டு நான் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். கடுங்கோடையிலும் இவை எப்படித் தங்கள் பச்சையத்தைப் பாதுகாக்கின்றன என வியந்திருக்கிறேன்.

வாழ்க்கையின் துன்ப நாட்களாகிய பாலைப் புவியில் சற்றும் தளராமல் வாழும் அநேகரை நான் சந்தித்திருக்கிறேன். இவர்களின் வாழ்க்கை இரகசியம் என்ன? இவர்கள் பெற்ற வெற்றியின் மருமம் என்ன? எவ்வாறு இவர்களால் உயிரின் ஈரப்பதத்தைக்கூட உலரவைக்கும் கடுந்துன்பங்களில் தாக்குப்பிடிக்க முடிந்தது? இவர்களிலும் சிலர், தங்களைத் தக்க வைத்துக் கொள்வதுமன்றி பிறரையும் ஈடேற்றுவதற்காகத் தங்களால் ஆன உதவிகளைச் சலிக்காமல் செய்துவருகின்றனர். பிறரது வாழ்க்கையில் ஆனந்த நீரூற்றை ஏற்படுத்துகின்றனர்.

பாலைவனத்திற்கு ஒரு சவால்

வாழ்க்கையில் எதிர்ப்படும் துக்கங்களாகிய பாலைவனத்தில் அகப்பட்டு கருகிக் போவதற்காக நாம் யாரும் அழைக்கப்படவில்லை. மாறாக, அப்பாலைவனமாகிய இடும்பைக்கே இடும்பை பயத்து சவால் விடுக்க வேண்டியவர்கள் நாம். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? வல்லவரும் உயிரின் ஊற்றுமாகிய கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டும் என்பதுதான். பரிசுத்த பைபிள் நம்மைப் பின்வருமாறு நினைவு படுத்துகிறது : “கடவுளை அணுகிச் செல்லுங்கள் ; அவரும் உங்களை அணுகி வருவார்” (யாக். 4:8).

இயேசுவை அணுகிச் செல்வோர் எவரையும் அவர் கைவிடுவதில்லை. ஏனெனில், “என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்” என அவரே வாக்குறுதி அளித்துள்ளார். இயேசுவைக் கண்டடைந்தவர்களால் எப்போதும் மகிழ்ச்சியடைய முடியும். ஏனென்றால், “உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு” (தி.பா. 16:11) என இறைவார்த்தை கூறுகிறது. பலரது வாழ்க்கை அனுபவங்களும் இதைத்தான் எடுத்தியம்புகிறது.

இயேசுவோடு இறுக்கமாய் இணைந்திருந்ததால் வாழ்க்கையில் நேரிட்ட ஒரு மிகப்பெரிய துன்பத்தை எங்ஙனம் எதிர்கொண்டு வெற்றிபெற்றனர் என்பதை ஒரு பெண்மணி என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவருக்கு கணவனும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். ஒருநாள் அவரது கணவர் தமது குழந்தைகளுடன், தம்முடைய தோட்டத்தில் பலாப்பழம் பறிக்கச் சென்றார். சற்று தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளில் இளைய குழந்தை எதிர்பாராத விதமாக பலாமரத்தடியில் ஓடி வர, பலாப் பழங்களில் மிகப் பெரியதான ஒன்று அதனுடைய தலையில் நெட்டுக்குத்தாக விழுந்தது. அத்தகப்பனால் ‘மகனே’ என விளித்துக் கதறுவதற்கு அல்லாமல் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அப்பிஞ்சுக் குழந்தையோ நிலைதடுமாறி நிலத்தில் விழ, அது நினைவிழந்த நிலையில் அங்கே கிடந்தது.

சிறிது நேரத்தில் அக் குழந்தையின் கைகால்கள் மரத்துப் போய் நாடித்துடிப்பும் பிழைபடத் தொடங்கிற்று. அதற்குள் எல்லாரும் அங்கே வந்து கூடிவிட்டனர். மருத்துவக் கல்லூரிக்கு அவனைக் கொண்டு போயினர். பெற்றோர் இருவரும் அவனருகிலேயே உண்டு. மகனின் இந்த நிலையை எந்தவொரு தாயினால் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியும். அவள் கதறி அழுதுகொண்டிருந்தாள். ஆனால் தகப்பனோ மிகுந்த வேதனையிலும் மவுனம் காத்தார். அவர் அவளிடம் நீ இப்படியே அழுதுகொண்டிருந்தால் என் நெஞ்சு பொறுக்காது என்றுகூறி அழுகையை நிறுத்தச் சொன்னார். வெறுமனே உட்கார்ந்து அழுவதைவிட அழுகைக்குப் பதிலருளும் பரமனை நோக்கி அழுவதே சாலும் என்றும் சொன்னார்.

அழுவோர்க்கான புத்தகம்

நம்முள் பலரது அழுகையும் இதுபோன்றதே. பலன்தராத அழுகை. இத்தகைய அழுகைகளால் எந்தப் பயனுமில்லை. ஆனால் அதேநேரத்தில் பிறரது தன்னம்பிக்கையைக் கூட இத்தகைய அழுகைகள் தளரச் செய்து விடும். நாமும் அடிக்கடி நமக்குள்ளே அழுவதுண்டு. நோய்வாய்ப் படும்போது, மரணங்களின் போது, பொருளாதார நெருக்கடிகளின் போது, பிறரது துன்புறுத்தல்களின் போது எனப் பல நேரங்களில் மனம் நொந்து அழுகிறோம். ஆனால் அங்ஙனம் அழும் கண்ணீர் பலநேரங்களிலும் பயனற்றதாகவே இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய கண்ணீர் கடவுளை நோக்கி உயர்வதில்லை என்பதே.

கடவுள் என் கண்ணீரைக் காணவேண்டுமென்ற பிடிவாதத்தோடு அவரை நோக்கி அழுதால் மட்டுமே அவர் நம் கண்ணீரைத் தம்முடைய தோற்பையில் சேர்த்து வைக்கவும், நமக்குப் பதில்தர வானகம் விட்டு இம்மண்ணுக்கு இறங்கவும் செய்வார். கடவுளை நோக்கிக் கதறியழும் கண்ணீரைக் கடவுள் மிகவும் விரும்புகிறார். நிறுத்தாமல் அழவேண்டும். ஆம், கடவுள் நம்மைக் கண்ணோக்கும் வரை நிறுத்தாமல் அழுதுகொண்டே இருக்கவேண்டும் என பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது. “வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன ; ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன” (புல. 3:49-50).

இப்போது அழுபவர்களே உங்களுக்கோர் நற்செய்தி : உங்களுக்காகவே ‘புலம்பல்’ என்னும் ஒரு நூல் மறைநூலில் காணப்படுகிறது : “நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர். என் சாக்குத்துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்” (தி.பா. 30:11) என பைபிள் எடுத்துரைக்கிறது.

ஆகவே, அப்பெண்மணியும் அவ்வாறே செய்தாள். அவள் கடவுளை நோக்கிப் புலம்பியழத் தொடங்கினாள். ஓடிக்கொண்டிருந்த ஜீப்பில் அவள் மண்டியிட்டாள். கண்கள் மூடிக் கிடக்கும் தனது தங்கமகனின் நெற்றித்தடங்களில் சிலுவை அடையாளமிட்டு இப்படிச் சொன்னாள் : “நாசரேத்து இயேசுவே, என் பிள்ளையைக் காப்பாற்றியருளும்”. மாதாவிடமும் அவள் விண்ணப்பித்தாள்: “என் இனிய அன்னையே, இயேசு உன் பிள்ளையாய்ப் பிறந்தபோது நீ எவ்வளவோ மகிழ்ச்சியடைந்தாய், ஆனால் அத்திருமகன் இறந்தபோது நீ எவ்வளவோ வேதனைப்பட்டாய். அவர் உயிர்த்தெழுந்த போது நீ மீண்டும் அக்களிப்புற்றாய். ஆகவே, மாதாவே என் பிள்ளைக்கு மீண்டும் உயிர்தந்து என்னையும் மகிழ்விக்க வேண்டும். அதற்காக நீ திருக்குமாரனை மன்றாட வேண்டும்.”

கடவுள் வந்த இரவு

உண்மைதான். நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் அடைக்கலம் தேடி நாம் ஓடிச் செல்லும் ஓர் இடமே பரிசுத்த மாதாவின் சன்னிதி. ‘இதோ உன் தாய்’ எனக்கூறி சிலுவையில் வைத்து அவ்வன்னையை யோவானுக்குத் தாயாக அளித்தார். அந்த யோவான் நம் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்துகொண்டு சிலுவையின் அடியில் நின்றவர். நாமும் சிலுவையின் அடியில் நிற்கவேண்டிய நிலை வரும்போது ஒன்றை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள். நாம் தனிமையாய் இல்லை. வேதனை பூண்ட ஒரு தாயும் நம்கூடவே உண்டு. அந்த அம்மாவின் உதவியை ஆவலோடு தேடுங்கள். தன்னை நோக்கி அழுகின்ற குழந்தையைத் தூக்கியெறிய ஏதேனும் தாயினால் கூடுமோ ? அப்படியானால் பரலோக அன்னை நம்மைக் கைவிடுவாளோ ?

நினைவிழந்த நிலையில் அவர்கள் குழந்தையை மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து சேர்த்தனர். மருந்துமாத்திரைகளால் எந்தப் பயனும் உள்ளதாகத் தோன்றவில்லை. ஆயினும் அப்பெண்மணி தன்னுடைய பிரார்த்தனையை எள்ளளவும் நிறுத்திக்கொள்ளவில்லை. நாம் பொதுவாகச் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், ஆரம்பத்தில் நன்றாக ஜெபிப்போம் ; மனவுறுதியோடும் இருப்போம். நம்பிக்கையை எள்ளளவும் தளரவிடவும் மாட்டோம். ஆனால் எந்தப் பலனும் விளையவில்லையென்றால் அவ்வளவுதான். உடனே நமது ஜெபங்களை நிறுத்திவிடுவோம். நம்பிக்கையைத் தளரவிடுவோம்.

ஆனால் அப்படியல்ல. கடவுளுக்கென்று ஒரு நேரம் இருக்கிறது. அதுவரையிலும் நாம் மிகுந்த ஆவலுடன் காத்திருக்க வேண்டும். ஜெபத்தைத் தொடரவும் வேண்டும். அங்ஙனம் காத்திருந்த அப்பெண்மணியைத் தேடி, என்றும் வாழும் உயிருள்ள கடவுள் அந்த இரவில் இறங்கிவந்து நினைவிழந்த நிலையில் கிடந்த அந்தக் குழந்தையைத் தொட்டார். மறுநாள் காலையில் அங்கிருந்த அனைவரும் திகைக்கும் பொருட்டு, அக்குழந்தை எழுந்துத் தன் தாயிடம், “அம்மா பசிக்கிறது” என்றது. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேது ? ஈடேது ?

அன்பு சகோதரனே, சகோதரியே உன்னை வாட்டி வதைக்கக்கூடிய எந்தப் பிரச்சனையாகவும் இருக்கட்டும், நீ அதை இயேசுவின் கரங்களில் கொடுக்கமாட்டாயா? அப்படிக் கொடுத்தால் நிச்சயம் ஆண்டவர் உன்னைத் தேடி வருவார்.
“எளியோரின் கதறலை அவர் என்றும் கேட்க மறவார்” (தி.பா. 9:12) ஆகவே நீ இப்போதே மவுனமாய் மனமுருகி மன்றாடு:

என் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசுவே, என் வாழ்க்கையின் மீது நீர் கருணையாய் இருந்தருளும். என்னை ஆசீர்வதிக்க நீர் ஓடோடி வாரும். நீரே வாழும் கடவுள் என நான் உறுதியாய் அறிக்கையிடுகிறேன். நீர் என் வேதனைகளைக் கண்ணோக்கும். என்னை நீர் உமது சொந்த மகனாக ஏற்றுக்கொண்டருளும். உம்மோடு நான் எனது பயணத்தைத் தொடரும் பொருட்டு நீர் உமது தூய ஆவியை என் துணையாகத் தந்தருளும். தூய மாதாவே, நீ உன் திருமகனிடம் என்னுடைய வேண்டுதல்களைத் தனிப்பட்ட விதமாய் எடுத்துக் கூறவேண்டும். புனித சூசையப்பரே எனக்காக வேண்டிக்கொள்ளும். – ஆமேன்.

– பேரா. கே.ஜே. மாத்யூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *