பேராசிரியரின் பெரும் புத்தி

அம்மனிதருக்கு மாம்பழம் என்றால் அலாதிப் பிரியம். அதற்காக அவர் தமது வீட்டைச் சுற்றிலும் மாமரங்களை நட்டு வைத்திருந்தார். சமயங்களில் மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்தே மாம்பழம் சாப்பிட்டு விடுவார். இது அந்த ஆளின் பொழுதுபோக்காகவும் இருந்தது.

ஒருநாள் மாமரத்தில் ஏறி ஒரு கொம்பை பற்றிப் பிடித்ததும் அது ஒடிந்தது. சட்டென பக்கத்துக் கொம்பைப் பற்றிக்கொண்டார். ஆயினும் விழுந்திடுவேனோ என்ற பயம் மனிதரைப் பிடித்துக் குலுக்கியது. எனவே இறங்க முடியாமல் தொங்கிக் கிடந்து கொண்டே கூச்சல் போட்டார். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் ஓடிவந்தனர். அவர்கள் உயரமான ஒரு ஏணியைக் கொண்டு வந்தனர். அதுவழியாக இறங்கவும் மனிதர் பயந்தார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் தங்கியிருந்த பேராசிரியர் மரத்தடியில் ஓடிவந்தார். அப்போது லேசான மழைத்தூறலும் இருந்தது. மழை நீடித்தால் அம்மனிதர் நடுக்குற்றுக் கீழே விழக்கூடும் என பேராசிரியர் கருதினார்.

ஆகவே அவர் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அம்மனிதர் மீது படாதபடி எறிந்தார். மீண்டும் ஒரு சில கற்களை விட்டெறிந்தார். “ஓய், என்ன செய்கிறீர்?” என அங்கே நின்றவர்கள் கேட்டனர். பேராசிரியர் அதையெதையும் சட்டை செய்யவில்லை. அம்மனிதரோ அக்கற்கள் தம்மீது படாதபடி உடம்பினை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருந்தார். ‘நான் இறங்கி வந்து உனக்குக் கொடுக்கிறேன், பார்’ என்று பேராசிரியர் மீது ஆத்திரப்பட்டு கீழே இறங்கத் தொடங்கினார் மனிதர். கீழே இறங்கியதும் எங்கே அந்த முட்டாள் பேராசிரியர் எனக் கேட்டார். ஆனால் அதற்குள் பேராசிரியர் எங்கோ போய் மறைந்து விட்டார்.

அப்போது கூட்டத்தில் ஒருவர், “ஓய், அவர் கல்லெறிந்ததால் தான் நீர் இப்போது இறங்கினீர்; இல்லாவிடில் மரத்தில்தான் இருந்திருப்பீர் என்றார். தனது நெஞ்சுக்குத் துணிச்சலை ஊட்டத்தான் பேராசிரியர் இங்ஙனம் செய்தார் என்பதை உணர்ந்து அம்மனிதர் வெட்கிப்போனார்.

நாம் உட்கார்ந்திருக்கிற சில கொம்புகள் முறிந்துவிடும் என்பதை இறைவன் அறிகிறபடியால்தான் அக்கொம்புகளை விட்டு நீங்கும்படி அவர் நமக்குச் சில துன்பங்களைத் தருகிறார். ஆனால் அப்போது நாம் அதை உணர்ந்து கொள்வதில்லை. எனவே கடவுளைப் பழித்துப் பேசி அவருக்கு எதிராகப் புகார்களைத் தொடுக்கிறோம்.

“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும் போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள்” (யாக் 1:12).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *