நீலிக்கண்ணீரில் இருந்து கல்வாரியை நோக்கி

எவ்வளவோ தியானங்களில் பங்கெடுத்திருக்கிறேன். இருப்பினும் ஏன் எனது வியாதிகள் மாறவில்லை? என்று வருத்தப்படுபவர்களுக்கான விடைதான் இந்தக் கட்டுரை.

அன்று நான் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் கிளாரா மடத்துக் கன்னிகையான என் மூத்த சகோதரி, மஞ்சள் சட்டமிட்ட ஒரு அல்போன்சம்மாப் படத்தைக் கொடுத்து என்னிடம் சொன்னாள்: “இதோ பார்! நீ கண்ணீரோடு ஜெபித்தால் உனது காலில் ஊனத்தை அல்போன்சம்மா மாற்றுவாள்” என்று.

நானும் ஒருநாள் மாலையில் எல்லாரும் மேல்மாடியில் படித்துக் கொண்டிருக்க யாருக்கும் தெரியாமல் அல்போன்சம்மாப் படத்தை எடுத்து வீட்டின் பத்தாயக் காலில் சாய்த்து வைத்து ஜெபிக்கத் தொடங்கினேன்: “அல்போன்சம்மா, நீ என்னை நடக்கச் செய்யம்மா” என்று. ஆனால் உண்மையில் அந்த ஜெபத்திற்கு ஆழம் எதுவும் இருந்ததில்லை. கண்டிப்பாக என் கால்கள் நலமாக வேண்டுமென்று மனதார விரும்பவில்லை. சும்மா ஜெபிப்பதுபோல் பாவ்லா காட்டிக்கொண்டேன். அவ்வளவுதான்.

இறையழைத்தலைக் கண்டுணர்ந்த ஒரு நாள்

பின்னர் என்னுடைய பள்ளிப்படிப்புத் தொடர்ந்தது. 1989-ல் +2 படிக்கும் போது இடுப்புவலியின் காரணத்தால் அதை இடையிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று. என்னுடைய எதிர்காலம் குறித்த கனவுகள் அனைத்தும் அற்றுப் போவதாய்த் தோன்றிற்று. கூடவே என் உள்ளம் உடையத் தொடங்கியது. அப்போதுதான் நான் முதன் முறையாக ஒரு மறுமலர்ச்சித் தியானத்தில் பங்கெடுத்தேன். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் இறையன்பை அனுபவித்து அறியத் தொடங்கினேன்.

ஒவ்வொரு தியானத்திற்குச் செல்லும் போதும் பலவகையான கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதக்கத் தொடங்கினேன்: “தியான நாள்களில் இயேசு என் தளர்ந்த கால்களைத் திடப்படுத்துவார்; தியானம் முடிந்து வீட்டுக்கு வரும் போது, காரில் இருந்து இறங்கி நேராக என் அப்பாவிடம் ஓடிப்போய், நடந்த காரியங்கள் ஒவ்வொன்றையும் விலாவாரியாகச் சொல்லி மகிழ்ச்சி அடைவேன். அதற்குப்பின் எங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏறியிறங்கி, “உங்களுக்குத் தெரியும்தானே, நான் சப்பாணி என்று; ஆனால் இப்போது பாருங்கள் நன்றாக நடக்கிறேன்; இயேசு என்னைக் குணமாக்கினார்” என்பேன். அங்ஙனம் கிறிஸ்தவர்களல்லாத அக்கிராம வாசிகளிடம் இயேசுவைப் பற்றிச் சொல்லி பெருமைப்படுவேன்” இத்தியாதி கற்பனைகளை நான் வளர்த்து வைத்திருந்தேன்.

எத்தனையோ தியானங்கள் கடந்து போயின! தியான நாட்களில் ஷு போட்டுத் தான் உட்கார வேண்டியிருந்ததால் கால்களில் வீக்கம் ஏற்பட்டனவே அன்றி தளர்ச்சி எதுவும் நீங்கினபாடில்லை. சில நேரங்களிலாவது, “போவும் இயேசுவே, என்னை உமக்குப் பிடிக்கவே இல்லை” என்று கூறிப் பிணங்குவேன். ஆனால் மனசு பொறுக்காமல் மீண்டும் இயேசுவோடு அன்பைப் பாராட்டுவேன். இது இங்ஙனமிருக்க ஒருநாள் கடவுளின் ஆவியார் என்னோடு இங்ஙனம் மொழியலானார்: “இயேசுவுக்காக ஓடி நடப்பதற்கல்ல; ஆன்மாக்களின் மீட்புக்காய் அவரோடு சிலுவையில் அமைதியாய்த் தொங்கிக் கிடக்கவே அவர் உன்னை அழைத்திருக்கிறார்”.

புதிய மனத்தெளிவுகள்

அன்று கடவுள் விடுத்த அவ்வழைப்பை நான் இன்றளவும் என் வாழ்க்கையில் நனவாக்கி வருகிறேன். ஒரு சிறு சத்தத்திற்குக் கூட அல்லற்படும் அளவிலான துன்பங்களும், இரத்தம் வியர்க்கும் வகையிலான மனக்கிலேசங்களுமே என்னுடைய வாழ்க்கையின் உள்ளடக்கங்கள். ஆயினும், ஆன்மாவும் உள்ளமும் இறைவனின் ஆவியோடு ஒன்றிணைகின்ற வேதனைப்படும் ஒவ்வொருவருக்குமாக இத்துணை ஆழத்தில் பரிந்துரைத்து இறைவேண்டல் செய்ய முடிகின்ற வேறொரு பொழுது, துன்பநேரங்கள் அல்லாமல் வேறெப்பொழுது? ஆம். என்னுடைய வேதனைகள் அனைத்தும் கிறிஸ்துவின் சிலுவையில் விலைமதிப்பற்றனவாய் மாறுகின்றன. நானும் அவரோடு இறுக்கமாய் இணைந்து ஆன்மாக்களின் பொருட்டு துன்புறுகிறேன். இத்தகைய வலுவான நம்பிக்கை எனக்குள்ளே கொண்டுவரும் மனத் திருப்திக்கும் ஆன்மீக பேருவகைக்கும் அளவே இல்லை.

இவ்வுலகம் அவ்வப்போது தருகின்ற மகிழ்ச்சிகளுடன் இதனை ஒப்பிட்டுப்பார்க்கவும் முடியாது. தேன் இனிப்பாய் இருக்கிறதென்று நம் நாக்குத்தான் உணர்கிறது. அது போலவே களங்கமற்ற அன்பும் மீட்பருளக் கூடியதென்று அதற்குள்ளே மறைந்திருக்கும் இறையன்பின் ஆனந்தத் தேனினால் புரிந்துகொள்ளலாம். ஆனால் அதேநேரத்தில் வேதனை வேதனைதான். ஆனந்த நடனமும் சிலுவை மரணமும் இருவேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை. கடவுளின் துன்புறும் ஊழியனைப் பார்த்தவர்கள் முகம்திருப்பிக்கொண்டனர். தந்தை நம்பிக்கையோடு என்னை ஒப்படைத்த இத்துன்பக் கிண்ணம் என்னும் மனத்தெளிவு, மனவுறுதியையும் ஆன்மீக இன்பத்தையும் அளித்து சிலுவையில் தொங்கிக் கிடக்கும் பிறரிடமும் என்னைக் கொண்டு போய் சேர்க்கும். இன்று என்னுடைய இறையன்பின் அனுபவம் ஒரு நீலிக் கண்ணீரில் ஆரம்பமாகி கல்வாரியில் தொங்கும் கிறிஸ்துவின் சிலுவை வரைக்குமாய்க் கொண்டு சென்றுள்ளது. இன்பமோ துன்பமோ எதுவாயினும் என் கடவுள் அறியாமல் அல்லது அவர் அனுமதிக்காமல் என் வாழ்க்கையில் நிகழப்போவதில்லை என்று தூய ஆவியார் எனக்கு உணர்த்தினார்.

கடவுள் ஒரு ‘சூப்பர் மார்க்கெட்’ அல்ல

துன்பங்களும் வேதனைகளும் இல்லாமல் யாரும் இல்லை. ஆனால் அத்துன்பங்களின் மத்தியிலும் நாம் கொள்ளும் எதிர்வினைகளே நம்மை வேறுபட்டவர்கள் ஆக்குகின்றன. கல்வாரியில் நாட்டப்பட்டிருந்த மூன்று சிலுவைகளிலிருந்தும் அது தெளிவாகிறது. துன்பங்கள் ஒரு தெய்வீக மறைபொருள் ஆகும். யோபினுடைய கேள்விகளுக்குக் கடவுள் அளித்த பதிலுரை மனித மனங்களால் உணர்ந்து கொள்ளமுடியாத சில எதிர்கேள்விகள் ஆகும். கிறிஸ்தவ வாழ்வின் அடியாதாரமே துன்பங்கள்தான் என்பதைப் புனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் தெளிவாக்குகின்றன.

“திருச்சபையாகிய உடலை முன்னிட்டு கிறிஸ்து பட்ட பாடுகளின் மீதத்தை நான் என் உடலில் பூர்த்தியாக்குகிறேன்” என்றெழுதக் கூடிய துணிச்சலை உடைய புனித பவுல் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை அல்லாமல் வேறெதைக்குறித்தும் அறிய விரும்பவில்லை. சிலரைக் கடவுள் தனிப்பட்ட முறையில் தம்முடைய துன்பங்களில் பங்குசேர்வதற்காக அழைக்கிறார். நாம் எந்நிலையில் இருக்கிறோமோ அந்நிலையிலேயே நம்மை இறைவனுக்குக் கையளிப்போம். அப்போது நம்முடைய துன்பகாரணங்கள் அனைத்துமே இறைமாண்புக்கு வழிகோலும்.

பரணங்கானம் என்னுமிடத்திலுள்ள ஒரு சிறுமடத்தின் ஓர் சிற்றறையில் வெறும் 36 ஆண்டுகள் நோய்களுடன் போராடி உயிர்நீத்த ஓர் அருட்சகோதரியை இன்று உலகத்தின் நானாபாகங்களிலுமுள்ள பலிபீடங்களில் இறைமக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கு என்ன காரணம். இது கடவுள் வகுத்தத்திட்டத்தின் தெய்வீக மருமம் அல்லாமல் வேறென்ன?

கேரளத்தைப் போல இவ்வளவு ஆன்மீக மழை பொழியப்பட்ட பிரதேசம் மண்ணுலகில் வேறொன்று இல்லை. ஆனால் இப்பிரதேசத்தின் இன்றைய நிலையை கண்ணுற்றால் நம் ஆண்டவர் மீண்டும் சாட்டை பின்னி அடிப்பாரோ என்ற கவலைதான் மேலோங்குகிறது. நமக்குக் கடவுள் இன்று வெறும் ஒரு ‘சூப்பர் மார்க்கட்’ அல்லாமல் வேறென்ன? நாம் கடவுளை அன்பு செய்வது எதற்காக? எனக்குத் தேவையான பலவற்றையும் நான் அவரிடமிருந்து பெறவேண்டும். அதற்குத்தானே நாம் கடவுளை அன்பு செய்கிறோம்? அவையெல்லாம் கிடைத்துவிட்டால் நம் வழியும் வேறாகி விடும். நம்முடைய பக்திமுயற்சிகள் நம்மை உண்மையான ஆன்மீகத்தின் பாதையில் கொண்டு போய்ச் சேர்க்கின்றனவா என நாம் ஆராய வேண்டும்.

தியாகங்கள் சகித்து மரச்சிலுவைகளை ஏந்தி குரிசுமலைகளில் ஏறிச்செல்லும் நீங்கள் ஆண்டவர் மறைமுகமாய் உங்கள் தோள்களில் ஒப்படைத்து விடுகின்ற வாழ்க்கைச் சிலுவைகளை ஏன் தள்ளிநீக்குகிறீர்கள்? புனித அன்னை தெரேசா புண்ணியம் என்பதற்குத் தரும் விளக்கத்தைப் பாருங்கள்: “கடவுள் தருவதை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் கேட்பதைக் கொடுங்கள்” இது எவ்வளவு எளிதான விளக்கம்!

“அத்திமரம் தளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும், ஒலிவமரங்கள் பயனற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன். என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்” (அபக் 3:17-18).

– மினி தட்டில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *