நட்டதற்கு நீர் பாய்ச்சுக!

தற்காலச் சிறுசுகளின் சேட்டைகள் பலவும் கேட்டால் நம்பமுடியாதவை. நம்முடைய சிறுவர்கள்
தடைதாண்டியது எங்கே?

“தம் மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை அவனை இடைவிடாது தண்டிப்பார். அப்போது அவர்தம் இறுதிநாள்களில் மகிழ்வோடு இருப்பார்” (சீரா 30:1).

முதல் மணி அடித்ததும் நான் என் வகுப்புக்குச் சென்றேன். நான் ஒன்பதாம் வகுப்பாசிரியர். என் வகுப்புக்குப் பக்கத்தில் இருக்கிறது எட்டாம் வகுப்பு. நான் போகிற போக்கில் எட்டாம் வகுப்பினுள் நோட்டம் செலுத்தினேன். அங்கே சின்னப்பையன்கள் கூட்டமாய்க் குனிந்திருந்து எதையோ வாசிப்பது போல் தோன்றிற்று. சட்டென உள்ளே போனேன். என்னைக் கண்டதும் அவர்கள் எதையோ மறைக்கப் பார்த்தனர். என்னடா செய்கிறீர்கள் என்ற என் கேள்விக்கு ஒரு மாணவன் சொன்னான்:
“இங்கிளீஷ் படிக்கிறோம் டீச்சர்” என்று. அவன் ஒரு இங்கிளீஷ் புத்தகத்தையும் காட்டினான். சற்று பின்னால் மாறி நின்ற ஒரு மாணவன் கையைப் பின்னால் கட்டியிருந்தது கண்டு அவனிடமும் கேட்டேன்: “நீ என்ன படித்துக்கொண்டிருந்தாய்?” “சுட்டிவிகடன் டீச்சர்” நான் திடீரென அவன் கையைப் பிடித்தேன். முதலில் தடுத்தான். ஆனால் பிறகு அவன் அப்புத்தகத்தை என்னிடம் தந்துவிட்டான். அப்போதும் அவன் இது கீழே கிடந்த சுட்டிவிகடன் என்றே சொல்லிக் கொண்டிருந்தான். நான் அப்புத்தகத்துடன் வெளியேறினேன்.

சுட்டி விகடன் அளவுக்குத்தான் இருந்தது அப்புத்தகம். அதில் நாவல், சிறுகதை போன்ற பலவும் உண்டு. எல்லாமே அருவருப்பு மூட்டக்கூடிய பாலியல் பலாத்காரங்களும் வன்புணர்வுகளும்! அதிலிருந்த மலினப்படங்களோ என்னை மூர்ச்சையுற வைத்தன. எட்டாம் வகுப்பு மாணவர்கள் படிக்கிற புத்தகமா இது? பிறகு நான் அந்தக் கூட்டத்தில் குனிந்து உட்கார்ந்திருந்த ஒவ்வொரு மாணவனுடைய பின்னணியையும் ஆராய்ந்தேன். எல்லாருமே மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள். குடிப்பழக்கத்தில் மூழ்கிப்போன தந்தையரின் பிள்ளைகள்! வகுப்பில் கூச்சலிட்டு குழப்பங்களை உண்டாக்குபவர்களும் இவர்களே.

நடுங்க வைத்த பதில்மொழி

கிட்டத்தட்ட எல்லா வகுப்புகளிலுமே இப்படிப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். ஒவ்வொருவருடையவும் வாழ்க்கைப் பின்னணியை ஆராய்ந்தால் அம்மாணவன் இப்படியாகிவிட்டதில் வியப்பேதும் இல்லையெனத் தோன்றும். ஒன்று அவர்களின் பெற்றோர் சண்டையிட்டு பிரிந்தவர்கள், அன்றேல் பெற்றோரில் ஒருவர் தமது பங்காளியைப் பிரிந்து தனிக் குடித்தனம் சென்றவர் அல்லது இன்னொருவருடன் கள்ளத்தனமாகக் குடியிருப்பவர். அதுவுமில்லையென்றால் பகல் முழுவதும் கூலிவேலை செய்த பணத்தினால் மூக்களவு மாந்திக்கொண்டு வருபவர்கள். இப்படிப்பட்ட வீடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியும் இல்லை, எத்தகைய பாதுகாப்பும் இல்லை.

மக்களை வளர்த்தெடுப்பதில் பெற்றோரின் பங்கு ஒப்பற்றது. அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அன்புசெலுத்தி அரவணைத்து சமயங்களில் அவர்களைக் கண்டித்துத் திருத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். சீராக் 30:12-ல் இவ்வாறு வாசிக்கிறோம். “சிறுவனாய் இருக்கும் போதே அவனை அடித்து வளர். இல்லையேல் அவன் அடங்காதவனும் கீழ்படியாதவனுமாக மாறுவான். அவனால் உனக்கு மனவருத்தமே உண்டாகும்”.

ஒரு தடவை ஒரு மாணவனின் அப்பா என்னிடம், “டீச்சர், அவனை எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள். அவன் நன்றாகப் படித்தால் போதும்” என்று சொன்னார். நான் மறுமொழியாக, “மாணவர்களை அடிப்பதற்கோ கண்டிப்பதற்கோ கூட சட்டம் அனுமதிப்பதில்லையே” என்றேன். ஆனால் அவர், “நம்முடைய சிறு வயதுகளில் நாம் அடிபடவில்லையா? அதனால் தானே இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்” எனத் திரும்பக் கூறினார்.

இன்றைய மாணவர்களை யாரும் அடிக்கவோ, அவர்களின் தவறுகளைக் கண்டிக்கவோ மாட்டார்கள் என அவர்கள் நன்றாய் அறிவர். படிக்காவிட்டாலும் வெற்றி நிச்சயம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். என்ன தான் காலம் மாறினாலும் மாணவர்கள் மாணவர்கள் தானே? நீதிமொழிகள் 22:15 இல் இப்படி வாசிக்கிறோம்: “பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும். கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்”.

மேலும், “பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே. பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள். நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்திற்குத் தப்புவிக்கிறவனாவாய்” எனவும் அந்நூல் கூறுகிறது (நீமொ23:13,14).
வேறுபட்ட சூழல்களில் இருந்து வரும் மாணவர்கள் வேறுபாடு உடையவர்களாகவே இருப்பார்கள். மூத்த மாணவர்கள், அதிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பொதுவாக சற்று வீண்மானஸ்தர்களாகவே (people with self respect) இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடைய வயிற்றில் அடுப்பே பற்றியெரிந்தாலும் தங்கள் இன்னல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.

ஒரு தடவை மைதானத்தில் அசெம்பிளி நடந்து கொண்டிருந்தது. அப்போது யாரேனும் சோம்பலாக வகுப்பறையில் உட்கார்ந்திருக்கிறார்களா எனப் பார்க்கச் சென்றேன். ஒரு மாணவன் ஒன்பதாம் வகுப்பில் அமர்ந்திருந்தான். அவனோடு ஏன் இங்கிருக்கிறாய் எனக் கேட்டேன். அவன் சற்று ஆத்திரத்துடன், “டீச்சர் உங்களுக்கு என்ன தெரியும்? சாப்பிட்டே மூணு நாளாவுது; தல சுத்துது” என்றான். நான் அவனருகில் அன்போடு அமர்ந்தேன். அவனை மிகச்செல்லமாய் வருடிக் கொண்டு “ஏன் கண்ணு சாப்பிடக் கெடைக்கலயா?” எனக் கேட்டேன் அவனுடைய பதிலால் நான் அதிர்ந்து போனேன். “மக்கள் சாப்பிட்டாங்களா எனச் சிந்திக்க என் அப்பனுக்குத் தற்போதம் வேண்டாமா? நேத்து இராத்திரியில் கூட ஒரே களேபரம். நான் ஓடிப் போய் காட்டில மறஞ்சிண்டிருந்தேன். அம்மாவ ரொம்பவே சாத்திப்புட்டாரு”. என் கண்களும் பனித்தன. கருணை மீதூர நான் அவனை நோக்கினேன். அன்பு ததும்ப அவனை அணைத்தேன். இவனை நான் எப்படித் தேற்றுவது?

பரிவன்பின் அடையாளங்கள்

பெற்றோர்களுக்குப் பொறுப்பில்லாமற் போனால் சமூகத்தில் குற்றவாளிகள் அதிகரிப்பார்கள். சமூகத்தின் அடிப்படையாக விளங்குகின்ற குடும்பங்கள் புனிதமிழந்துவிட்டால் சமூகமும் நிலைகுலைந்து விடும். இந்த மண்ணுலகில் கடவுள் அருளும் ஆசியே நம் பிள்ளைகள். இவர்கள் கடவுளின் கருணைக்கு வெளிப்படையான அடையாளங்கள். இன்று சிலர் தங்கள் பிள்ளைகளின் பொருள் தேவையை அளவுக்கு அதிகமாகவே நிறைவு செய்கின்றனர். ஆனால் அவர்களின் அருள்தேவையை அவர்கள் சற்றும் சட்டை செய்வதில்லை. பிள்ளைகளைத் தேவாலயங்களுக்கு அனுப்பி வைக்கவோ, மறைக்கல்வி வகுப்புகளில் படிக்க வைக்கவோ, காலை மாலை ஜெபங்களைச் சொல்ல வைக்கவோ இல்லை. அப்படி வைத்திருந்தார்களென்றால் நம் பிள்ளைகளில் யாருமே வழிதவறிப் போய் எல்லை தாண்டியிருக்க மாட்டார்கள்.

“உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்” (திபா 119:11). பிள்ளைகளை கடவுள் பக்தியில் வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. அதிலும் தாயின் பொறுப்பு இன்னும் அதிகம். நம்முடைய முன்தலைமுறைத் தாய்மார்களைப் பாருங்கள்; அவர்கள் சதாநேரமும் ஜெபமாலையும் ஜெபமுமாக இருப்பார்கள். ஆனால் இன்று தாய்மார்களும் கூட தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் முண்டியடித்து உட்கார்ந்திருக்கிறார்கள்; அர்த்தமில்லாத, கோமாளித்தனமான நெடுந்தொடர்களைக் (சீரியல்) காண! இப்படியே போனால் நம் இளசுகளின் இளநெஞ்சங்களை சாத்தான் பந்தாட மாட்டானா?

பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களுக்கு (பி.டி.ஏ) வரும் சில தாய்மார்கள் என்னிடம் வந்து “டீச்சர், நான் சொன்னதை என் பையனிடம் சொல்லிவிடாதீர்கள்; அவன் ரகளை தாங்கமுடியாது” என்பார்கள். 13 முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் இப்படிப்பட்ட அபாயம் உள்ளவர்கள்.

“மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்து திருத்து. இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாய் இருப்பாய்” (நீமொ 19:18) என்னும் நீதிமொழியை நாம் கவனத்தில் கொள்வோம். “உன் மகனுக்கு நற்பயிற்சி அளி; அவனைப் பயன்படுத்த முயற்சி செய். அப்போது அவனது வெட்கங்கெட்ட நடத்தையால் நீ வருந்தமாட்டாய்” (சீரா 30:13).

நீங்கள் உங்கள் பிள்கைளை எல்லாத் தீமையிலிருந்தும் அகற்றுங்கள். அலகையோடு அளவளாவ விடாதீர்கள். பூரண உள்ளத்துடன் ஆண்டவரைத் தேடவும் அவருக்கே தொண்டு செய்யவும் உங்கள் பிள்ளைகளுக்கு நற்பயிற்சி அளிக்க சற்றும் மறவாதீர்கள்.

– ஆசிரியர் சிசி லூயிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *