திருவுளம் அறிய

“நீங்கள் வலப்புறமோ இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், இதுதான் வழி; இதில் நடந்து செல்லுங்கள் என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்” (எசா 30:21)

சின்னக் குழந்தைகளைத் தாய்மார்கள் நடைபழகச் செய்யும் காட்சி அலாதியானது. குழந்தையை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, தாய் தன்னுடைய இரு கைகளையும் நீட்டி வா, வா எனச் சொல்லிக்கொண்டே பின்னோக்கிச் செல்வாள். அக்குழந்தையோ தாயின் கரங்களையே நோக்கியவாறு எட்டுவைத்து எட்டுவைத்து முன்னேறும். குழந்தையின் பார்வை சற்று பிசகினாலும் விழுவது உறுதி. தாயின் கைவளையத்திற்குள் இருக்கும் வரை அக்குழந்தை பாதுகாப்பாக இருக்கும்.

நடைபழகும் ஒரு குழந்தையின் மனப்பான்மையே உண்மையான ஆன்மீகத்தின் அளவுகோல். எல்லாம் மறந்து, பரம்பொருளின் திருக்கரங்களைப் பற்றிப்பிடித்த பயணம்! எல்லாவற்றையும் கடவுளின் காலடிகளில் ஒப்புவித்து முன்னோக்கிச் செல்லும் போது தவறுகள் நேர்வதில்லை. ஏனெனில் கடவுளின் குரலைக் கேட்டு அதற்கேற்ப வாழ்வதுதான் நமது முதற்கடமை. “கடவுளை அணுகிச் செல்லுங்கள், அவரும் உங்களை அணுகிவருவார்” (யாக். 4:8)

கடவுளின் திருவுளத்தை அறிவதற்கான முதல்வழி தனித்திருந்து ஜெபிப்பதாகும். தனித்திருந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையை முற்றிலுமாய் ஒரு திறந்த புத்தகம் போல் அவர் முன்னே திறந்து வையுங்கள். யாதொன்றும் பேசவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இறைவார்த்தை என்ன சொல்கிறதென்றால், “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்” (மத். 6:8) என்று. மவுனப்பிரார்தனையில் பிதற்றலுக்கு இடமில்லை. ” நீ வேண்டும்பொழுது பின்னிப் பின்னிப் பேசாதே” (சீரா. 7:14)

நம் உள்ளத்தில் உறையும் தூய ஆவியார் தகுந்த அறவுரைகளால் நம்மை முன்னோக்கி வழிநடத்துகின்றார். நாம் கவனக்குறைவோடு செயல்பட்டாலும் அவர் நமது காரியங்களில் அக்கறையுற்றவரும் கவனமுடையவருமாய் இருக்கிறார்.  “…………..அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்” (1பேது. 5:7)
கடவுளைப் பற்றிய நினைவில் உற்றிருப்பதே ஜெபத்தின் மிகமுக்கியமான நேரம். நாம் தனித்திருந்து ஜெபிக்கும் போது தான், எண்ணம், ஓசை, பார்வை, கனவு, இறைவார்த்தை போன்றவற்றின் மூலம் கடவுள் தம்முடைய திருவுள்ளத்தை நமக்கு வெளிப்படுத்துவார்.

ஒரு தடவை தியானம் நடத்துவதற்காக நாங்கள் வெளிநாடு சென்றிருந்தோம். அது ஒரு குளிர்காலம். ஓரிடத்தில் தியானத்தை முடித்துவிட்டு மறுநாள் வேறோர் இடத்திற்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அதற்காக அதிகாலை 3 மணிக்கே துயிலெழ வேண்டும். எங்களிடையே டைம்பீஸ், மொபைல் போன்ற எந்த வசதியும் இல்லை. ஆகவே என்னை அதிகாலையில் துயிலெழுப்ப வேண்டிய பொறுப்பைக் கடவுளிடம் கொடுத்துவிட்டு நான் படுத்துறங்கினேன். உறக்கத்திற்கு நடுவே ஒரு மணியோசை கேட்கிறது. அச்சமயத்தில் யார் இப்படி மணியடிக்கிறார் என முனகிக்கொண்டே மறுபக்கம் திரும்பிப்படுத்தேன்.

அப்போது இதோ அவ்வோசை கூடிக்கொண்டே வருகிறது. எங்கிருந்து அவ்வோசை வருகிறது எனக் கவனித்தேன். ஜன்னல் பக்கத்திலிருந்து வருகிறது! தீடீரென எழுந்து ஜன்னல் ஓரமாய் போய்ப் பார்த்தேன். அப்போது அவ்வோசை குறுகிக்குறுகி இறுதியில் இல்லாமலாயிற்று………………. எதற்கும் நேரம் என்னவாயிற்று எனப்பார்போமே என்று சொல்லி கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 3.51 சரியாக மூன்று மணிக்கே ஆண்டவர் மணியடிக்கத் தொடங்கியிருக்கிறார். நான்தான் பிந்தியிருக்கிறேன். எதற்கும் ஆண்டவர் எழுப்பியதால் தக்க சமயத்தில் போய்ச் சேர முடிந்தது.

“இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை. ஆண்டவரே உம்மைக் காக்கின்றார். அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே உமக்கு நிழல் ஆவார்” (தி.பா 121:4–5). கடவுளின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி நடக்கத் தொடங்கினால் அற்புதங்களின் ஊர்வலம் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும்.

இயேசு தமது தந்தையிடம் ஜெபத்தின் மூலமாகவே நிரந்தரம் உறவாடி வந்தார். அவர் தந்தையிடம் உறவாடுவதற்காகவே பாழ்வெளிகளுக்கும் மலையடிவாரங்களுக்கும் சென்றுவந்தார் (மத். 14:23; மாற். 1:35; 6:46; லூக். 3:21; 5:16; 6:12) தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இயேசுவின் ஒரே குறிக்கோள். ” என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” (யோவா. 4:34).

– அருட்சகோதரி ஜோயிஸ் எம். எஸ். எம். ஐ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *