உனக்கு என் அருளே போதும்

நாம் விரும்பும் ஊழியங்களைப் புரிவதில் அல்ல ; கடவுள் விரும்பும் ஊழியங்களைப்
புரிவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

1984 -ல் அந்தச் செயல் நடந்தது. எங்களுடைய கிராமப்புறக் கோவிலில் முதியோர்களுக்கான ஒரு தியானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கெனவே தியானத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். தியான தினத்தன்று காலையில் மிகப்பெரிய ஒரு சிக்கல் எங்கள் முன் உருவானது. அதாவது, எங்கள் பங்குக் கோயிலில் அப்போது ஒரு நல்ல கழிப்பறை எதுவும் இல்லை. இருந்த ஒரே ஒரு கழிவறையும் உபயோகிக்க முடியாத வகையில் அழுக்கடைந்து, காட்டுச் செடிகள் வளர்ந்து, புதர் மண்டிக்கிடந்தது. ஆண்கள் விஷயத்தில் கவலையில்லை. அவர்கள் கோவில் வளாகத்தின் மறைவிடங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், பெண்கள் மிகுந்த பரிதாபத்துடன் எங்களை நோக்கினர்.

உடனே நான் மற்றொன்றும் யோசிக்காமல், கோவில் சமயற்காரரிடம் ஓடிச்சென்று ஒரு வெட்டுக்கத்தியை வாங்கிவந்து அந்தக் கழிவறையில் தாறுமாறாக வளர்ந்திருந்த செடிகொடிகளை வெட்டி நீக்கினேன். ஒரு துடைப்பத்தால் உட்பகுதியை நன்கு அடித்து வாரினேன். புதர் மண்டிக் கிடந்ததால் பக்கத்தில் வருவதற்கே எல்லாரும் அஞ்சினர். ஏனெனில் அங்கே ஊர்வனவற்றின் ஆதிக்கம் சற்று அதிகம்தான். இருப்பினும் புனித கீவற்கீஸ் சகதாவை துணைக்கோடி நான் தனியொருத்தியாய் நின்று சிறிது நேரத்திலேயே அப்பாழடைந்த கழிவறையை உபயோகமுள்ளதாக மாற்றினேன். நெஞ்சிலே நான் உருவிட்ட பரவசப் பேச்சும், வாயினால் சொல்லிய சிறு ஜெபங்களும் அதற்கான துணிச்சலை எனக்குள் விதைத்தன.

ஆண்டுகள் பல கடந்தன. திருமணத்தால் நான் என் பிறந்த ஊரில் இருந்து மலபார் பிரதேசத்திற்குப் பறித்து நடப்பட்டேன். இரண்டு குழந்தைகளுக்கும் தாயானேன். இதற்கிடையில் உடல் உபாதைகளால் சில வருடங்கள் துன்புற்றேன். கோவில் பணிவிடைகளில் பங்கு சேர முடியாமல் பரிதவித்தேன். ஒருநாள் நான் தனியாக ஜெபித்துக்கொண்டிருந்தபோது என்னைத் தேற்றக் கூடிய ஒரு மிகப்பெரிய இறையனுபவம் எனக்கு ஏற்பட்டது. திடீரென, இறையன்பின் ஓர் ஆனந்த அனுபவம் எனக்குள் நுழைவதுபோல் தோன்றிற்று. அவ்வனுபவத்தின் இடையில் ஆண்டவர் என்னோடு பேசினார். அவர் என்னை நோக்கி, “இதுவரை நீ எனக்காகச் செய்த பணிவிடைகளில் நான் மிகவும் விரும்பி ஏற்ற பணிவிடை எதுவென உனக்குத் தெரியுமா ?” எனக் கேட்டார். நானோ தெரியாது என்றேன். திடீரென அன்றொருநாள் நான் கழிவறை கழுவிய செயல் என் நினைவுக்கு வந்தது.

ஆண்டவர் என்னிடம் கூறியது : “இதைத்தான் உன்னிடமிருந்து நான் மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்டேன். நீ அந்த செயலை இழிவாக நினையாமல் ஓடிப்போய் எனக்காகவே அதைச் செய்தாய். அன்று உன்னை முன்னிட்டு வான்வீடு அக்களித்தது”. உடனே என் துன்பங்கள் அனைத்தும் கண்ணீர்த் திவலைகளாய்க் கண்ணிலிருந்து வடிந்து வெளியேறின. மிகப்பெரிய மனப்பாரம் என்னை விட்டு நீங்கி உள்ளம் இலேசாவது போல் தோன்றிற்று. இறை ஊழியங்கள் என நான் எண்ணியிருந்த பலவற்றைச் செய்ய முடியாமற் போனதுபற்றிய கவலையை நான் விட்டொழிந்தேன். அதற்காக நான் இனி மனம்வருந்த மாட்டேன் என உறுதிபூண்டேன். ஆனால் ஓர் இலையை என் கையால் எடுக்க நேர்ந்தாலும் அதையும் இறையன்பை முன்னிட்டுச் செய்வேன் எனப் பிரதிக்கனை பூண்டேன். புனித குழந்தைத் தெரசாவே இக்காரியத்தில் எனக்கு வழிகாட்டி, ஈளை நோயினால் அவதிப்பட்ட அப்புண்ணியவதி ஒரு காகிதத் துண்டை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடும்போது கூட அதையும் இறையன்பை முன்னிட்டே செய்துவந்தாள்.

அவளுடைய சின்னச்சின்ன புண்ணியங்களும், அப்புண்ணியங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த சின்னச் சின்னத் தியாகங்களுமே அவளை ஒரு மிகப்பெரிய புனிதையாய் மாற்றியது. ஏனெனில் அவளுடைய ஒவ்வொரு புண்ணியச் செயலும் இறையன்பின் வெளிப்பாடாய் இருந்தது. கடவுள் நம்மிடமிருந்தும் இவ்வாறான பணிவிடைகளைத்தான் எதிர்பார்க்கிறார். நாம் என்னவாக இருக்கவேண்டுமென்று இறைவன் விரும்புகின்றாரோ அதுவாக இருப்பதற்கு நாம் நம்மையே கடவுளிடம் ஒப்படைத்து விடுவதில்தான் முழுமை அடங்கியிருக்கிறது. இதை நன்குணர்ந்த புனித பவுல் பின்வருமாறு கூறுகிறார் : “இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்” (1கொரி. 15:10) புனித குழந்தை தெரசாள் தன்னுடைய சுயசரிதையின் (auto biography)  தொடக்கத்தில் இப்படி எழுதினாள். “கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும் அவர் தரும் இடத்தில் தங்கியிருப்பதிலும் தான் புண்ணியத்தின் முழுமை அடங்கியுள்ளது என்று.”

கடவுளின் வழிகள்

மனிதர் பெரிதென்று நினைப்பவற்றை மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பதிலோ, மனிதர் உயர்ந்ததெனக் கருதும் ஊழியங்களில் சதா ஈடுபடுவதிலோ ஒன்றும் இறைவன் பூரிப்பு அடைவதில்லை. ‘என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்று அழைப்பவர்கள் அல்ல ; விண்ணுலகிலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவர்களே விண்ணரசில் நுழைவார்கள்’ என்கிறார் ஆண்டவர். பரம தந்தையின் விருப்பமோ, மனிதர்களின் இயல்பான எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டதாகும். “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்கிறார் ஆண்டவர். மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும் உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.” (எசா. 55:8-9)

இக்கால விசுவாசிகளின் வாழ்க்கையைச் சோதித்தால் சில உண்மைகள் புலனாகும். இன்று பலர் திருப்பலிகளில் கலந்து கொள்வதிலும் பக்தி முயற்சிகளில் பங்கெடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவற்றினால் மட்டும் இவர்கள் நிறைவு பெறுவதில்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக, தங்களுக்கு மிகவும் பிடித்த சில காரியங்களைச் செய்யத்தான் இவர்கள் விரைகின்றனர். இவற்றைச் செய்யமுடியாமற் போனால் மனக்கலக்கம் அடைகின்றனர். தங்கள் வாழ்வு வீணாக உதிர்கின்றதே என ஏங்குகின்றனர். நமது வாழ்க்கையைக் குறித்த கடவுளின் திட்டத்தை அறியாமற்போவதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது. ஏனெனில் அவரே கூறுகிறார் : ” உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்” (எரே. 29:11).

கடவுள் நமது வாழ்வை முன்னிட்டு வகுத்துவைத்திருக்கும் திட்டங்கள், நாம் வகுத்து வைத்திருக்கும் திட்டங்களுடன் ஒத்துப்போகாமற் போவதே நமது துன்பத்திற்கான காரணம். நானும் எண்ணிப்பார்க்கிறேன், உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துவந்த காலத்தில் நன்றாக ஆடுவேன். நடிப்பேன். அப்போதெல்லாம் நான் எதிர்காலத்தில் ஒரு திரைப்பட நடிகை ஆகவேண்டுமென்றே விரும்பினேன். ஆனால், மேனிலைப்பள்ளியில் பயின்ற காலத்தில் ஆட்டமும் நடிப்பும் சற்றே அகன்று பக்தியில் ஈடுபட்டேன். அந்த பக்தி, என் உள்ளத்தில் ஆழ்ந்திருந்த பக்குவமில்லாத காலத்தின் வீணான கனவுகளை வேருடன் பிடுங்கிற்று. எப்போதுமே ஆண்டவரின் அன்பில் ஊறிப்போய் அதிலே திளைத்திருக்கும் இக்காலத்தில் அன்று கண்ட பொட்டைக் கனவுகளை நினைத்துக் குலுங்கிச் சிரிப்பதுண்டு. நான் ஆக விரும்பியது ஒன்று ; ஆண்டவர் என்னை ஆக்கியது இன்னொன்று. இன்று நான் இங்ஙனம் எழுதும் வலிமையை எனக்கு அருள்வதுகூட, என் விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் எதிராக என்னை வழிநடத்திய அவரது வேறுபட்ட வழிகளே ஆகும்.

மார்த்தாவும் மரியாவும்

ஒரு முறை இயேசு மார்த்தா, மரியா, இலாசர் ஆகியோர் வசித்துவந்த வீட்டுக்கு சென்றார். ஆண்டவரை வரவேற்ற மார்த்தா அவரை உபசரிக்கும்பொருட்டு பல்வேறு பணிவிடைகளில் பரபரப்பாக இருந்தாள். ஆனால் மரியாவோ ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். மரியா அங்ஙனம் போய் உட்கார்ந்திருப்பதைக் காணப்பொறாத மார்த்தா, “ஆண்டவரே நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியாய் விட்டுவிட்டாளே, உமக்குக் கவலை இல்லையா ? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றாள். ஆனால் இயேசு அவளிடம், “மார்த்தா, மார்த்தா, நீ பலவற்றைப் பற்றிக் கவலைப் பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” (லூக். 10:41-42) இதன் பொருள் மார்த்தாவின் செயல்கள் தேவையற்றவை என்றல்ல;மாறாக, இதைவிட மேலானதை மரியா செய்துகொண்டிருக்கிறாள் என்பதாகும். ஆதலால் குழந்தைத் தெரசா கூறியதை மீண்டும் கூறுகிறேன்: “கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும் அவர் அருளும் இடத்தில் தங்கியிருப்பதிலும்தான் புண்ணியத்தின் முழுமை அடங்கியிருக்கிறது.”

மார்த்தாமார்கள் அதிகம் மரியாமார்களோ குறைவு

இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு பகுதியில் நோக்கினும் அங்கெல்லாம் மார்த்தா மார்கள் நிரம்பி வழிகிறார்கள். மரியாமார்கள் ஆங்காங்கே தென்படுகிறார்கள். கடவுளே இப்படி வகுத்துவைத்துள்ளார். ஆனால் பிரச்சனை அதுவல்ல. ஒவ்வொரு மார்த்தாவும் என்ன நினைக்கிறார்கள் என்றால் எல்லாரும் தங்களைப் போல் ஆகவேண்டுமென்று இங்கேதான் தவறு நிகழ்கிறது. ஒவ்வொருவரும் தங்களால் இயலாமற்போன நல்ல பல காரியங்களைக் குறித்துப் புலம்புகிறார்கள். ஆனால் இப்படிப் புலம்புவோர் ஒருபோதும் நினைப்பதில்லை, இந்நல்ல காரியங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடைபெற வேண்டுமென இறைவன் திட்டம் வகுக்கவில்லை என்று ! ஒருவேளை அது பிறர் மூலமாய் நிறைவேற வேண்டுமென்றே இறைவன் விரும்பக்கூடும்.

தற்பெருமை என்னும் செருக்கு

மனிதர் உயர்ந்தவையாய் நினைக்கும் பலவும் தங்களின் மூலமாகவே செய்யப்பட வேண்டுமென்று நினைக்கின்றனர். இதுவே தற்பெருமை. ஆனால் கடவுளின் பார்வையில் தற்பெருமைக்கு இடமில்லை. அப்படியே இருந்தாலும் அவர் பெரிதாக நினைப்பதை மனிதன் இழுக்காக நினைக்கிறான். புனித பவுலின் வார்த்தைகளைக் கேளுங்கள் : “கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்” (1கொரி. 1:27). இம்முறையில்தான் கடவுளின் தேர்வும் அவரது வழிமுறைகளும் !

குழந்தை நிகரியர் பேறுபெற்றோர்

இயேசு ஒரு சிறுபிள்ளையை அழைத்து அவர்கள் நடுவே நிறுத்தி, “நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறுபிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” (மத். 18:4-5) விண்ணரசை முன்னிட்டு மிகப்பெரிய காரியங்களைச் செய்ய முனைந்து, அதற்கான வீரதீரங்களில் இறங்கிய தம் சீடர்களுக்கு ஆண்டவர் அருளிய முன்மாதிரி எதுவென்றால் ஒரு குழந்தை.

மேலும் அவர்களுக்கிடையே பெரியவர் யார் என்ற வாக்குவாதம் எழுந்தபோது இயேசு கூறியது. “உங்களிடையே பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத். 20:27-28). ஆம் கடவுளின் வழிகள் இங்ஙனம் முற்றிலும் வேறுபட்டவையாகவே உள்ளன. எனவேதான் அவர் கால்நடைகளுக்கு மத்தியில் வந்து பிறக்கவும் திருவுளமானார். அனைத்திற்கும் ஆண்டவராகிய அவர் கிடந்து மரிப்பதற்கு ஆறடி மண்கூட இல்லாமல் வானத்துக்கும் பூமிக்குமிடையே மிகவும் சபிக்கப்பட்டவராய் ஒரு சிலுவையில் தொங்கி மரித்தார். கடவுளின் திட்டங்களும் வழிமுறைகளும் இப்படிப்பட்டதே ஆகும்.

ஆகவே நாம் செய்ய வேண்டியது என்ன ?

நிறைவேறாத கனவுகள் பலவற்றைச் சுமப்பவர்களாக நாம் இருக்கலாம். ஆனால் அவற்றை எண்ணி இனி கவலைப்பட வேண்டாம். நாம் எதுவாக மாறவேண்டுமென்று இறைவன் விரும்பினாரோ அதுவாக மாறுவதற்கு நாம் நம்மையே அவரிடம் ஒப்படைப்போம். நாம் எதிர்பார்த்த வேலையோ ஊழியமோ எதையும் நாம் பெறாதவர்களாக, நம் விருப்பத்திற்கு மாறான ஒரு தொழிலைச் செய்ய நேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆயினும் கவலைப்படக் கூடாது. ஏனெனில் நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ அதுவே கடவுளின் விருப்பமாக இருக்கலாம். அதற்காக இறைவனுக்கு நாம் நன்றிகூற வேண்டும்.

நாம் செய் யும் வேலைகள் மட்டிலும் சோம்பேறிகளாயிருக்கவும் கூடாது. வேலைகளை உதாசீனப்படுத்தவும் கூடாது. ஒன்றைமட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். நம் ஆண்டவர் இப்பூமியில் ஒரு தச்சரின் மகனாகவும் ஏழைகளில் ஏழையாகவுமே பிறந்தார். நிறைவேறாத நம்முடைய கனவுகளை நினைத்து இன்றைய தினங்களையும் நம்முடைய எதிர்வரும் நாள்களையும் இழந்துவிட வேண்டாம். நம்மைப் பொறுத்தமட்டில் ஆண்டவரின் திட்டம் நன்கு நிறைவேறும் பொருட்டு நாம் நம்மை அவருக்குக் கையளிப்போம்.

எல்லாருமே என்னைப்போல் இருக்க வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்த மார்த்தாவைப் போல் நாம் ஆக வேண்டாம். அங்ஙனம் செய்தால் மரியாக்களைப் பழிசுமத்துவோரும், கடவுளின் திருவுளத்தை அவமதிப்போருமாய் நாம் மாறிவிடக்கூடும்.
மனிதர்களுக்கு முன்னால் நாம் சிறுமைப்பட்டவர்கள் என்ற தாழ்வுமனப்பான்மையும் தேவையில்லை. மனித பார்வையில் ஒன்றுமில்லாதவர்களை உயர்த்த நம் ஆண்டவர் மிகவும் வல்லவர். சமையலில் ஈடுபட்டிருப்பவர்கள் மனந்நொந்துபோக வேண்டாம். சமையற்கட்டுகளில் இருந்து பலிபீடத்திற்கு உயர்ந்த ஏராளம் புனிதர்கள் நம்முடைய வரலாற்றில் காணப்படுகின்றனர். அவர் அனுமதிப்பதால்தான் நாம் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இந்த நிலையிலும் கடவுளைப் புகழ்ந்துபாடும் அருளை வேண்டி தூய ஆவியிடம் ஜெபிப்போம்.

உனக்கு என் அருளே போதும் எனக்கூறியவர், அவ்வருளில் நம்மை இடையறாது நிலைத்திருக்குமாறு செய்யட்டும்.

– ஸ்டெல்லா பென்னி

1 Comment

  1. Florence.v says:

    Thank u madam.reeally this article consoles me a lot.thank u Jesus.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *