சாத்தானைப் பொருட்படுத்தலாமா?

தெய்வீகமானவற்றிலிருந்து நம்மை முற்றிலும் அகற்றுகின்ற சாத்தானின் சூழ்ச்சிகளில் அகப்படாதிருக்கவும், அவன் நமக்கு தொல்லை தராமல் இருக்கவும் என்ன வழி ?
இறைமக்கள் சாத்தானையும் அவனது சூழ்ச்சிகளையும் அறிவதற்கு எப்போதும் ஆவலாய் இருக்கிறார்கள். அவனது தந்திரங்களைப் பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே நாம் அவனை எதிர்த்து நிற்க முடியும். சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார் புனித பவுல் (2 கொரி. 2:1). சாத்தானின் குடிலதந்திரங்களைத் தகர்த்திட நாம் கடவுளின் எல்லா போர்க்கலன்களையும் அணிந்துகொள்ள வேண்டும் (எபே. 6:11) கடவுள் அருளும் படைக்கலன்களாவன: இடைக்கச்சையாகிய உண்மை ; மார்புக் கவசமாகிய நீதி ; மிதியடிகளாகிய அமைதியின் நற்செய்தி ; கேடயமாகிய நம்பிக்கை ; தலைச்சீராவாகிய மீட்பு ; போர்வாளாகிய இறைவார்த்தை (எபே. 6:14-17). உமது வார்த்தை என் கால்களுக்கு விளக்கு என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (தி.பா. 119:105). மேற்கண்ட போர்க்கலன் களை அணியாமல் சாத்தானுடன் மல்லுக்கட்டுவது மூடமையாகும். ஏவாளுக்கே தீங்கிழைத்த சாத்தான் நம்மையும் எங்காவது மாட்டிவிடத்தான் பார்க்கிறான். கடவுளைத் தேடும் விவேகிகள் உண்டோ என அவர் விண்ணுலகிலிருந்து கண்ணோக்குவதுபோல், சாத்தானைத் தேடும் மடையர்கள் உண்டோ என நரகத்திலிருந்து அவனும் கண்ணோக்குகிறான். கர்ஜிக்கும் சிங்கத்தைப் போல் யாரை விழுங்கலாம் என அவன் தேடி அலைகிறான். பிசாசுக்கே உரிய பிரேத சினிமாக்களைப் பார்ப்பவர்கள், ஹாரி பாட்டர் போன்ற நெடிய புதினங்களை வாசிப்பவர்கள், சும்மா ஒரு சுகத்திற்காகச் சுற்றித் திரிபவர்கள், பின்விளைவுகள் அறியாமல் ஒஜோபோர்டு போன்றவற்றை விளையாடுபவர்கள் முதலானவர்களையெல்லாம் சாத்தான் நரகத்திலிருந்து கண்ணோக்குகிறான்!

இயேசுவைத் தேடுவோரிடம் அவர் இறங்கி வருவதுபோல், சாத்தானைத் தேடுவோரிடம் அவனும் ஏறி வருகிறான். அவனது வருகை தெய்வீகமான நமது எண்ணங்களைச் சிதறடித்துவிடும். பிறகு தெய்வீகமான காரியங்களைப் பேசுவதோ அல்லது கேட்பதோ கஷ்டமாகி விடும்.

எனக்குத் தெரிந்த ஒரு குரு மாணவர் இருந்தார். அவர் விடுமுறைக்கு வீட்டில் வரும்போதெல்லாம் என் வீட்டுக்கும் வருவார். என்னுடைய இளைய மகன் குருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததனால் அவனிடம் நன்கு பழகுவார். தெய்வீகக் கதைகளை அவனுக்குச் சொல்லிக்கொடுப்பார். ஒருமுறை வீட்டுக்கு வந்தபோது அவரது எண்ணங்களில் சில கீறல்கள் விழுந்திருப்பதைக் கண்டேன். அவர் செமினாரியைக் குறித்தும் குருவானவர்களைக் குறித்தும் தப்பெண்ணம் வைத்துப் பேசுவதைக் கண்டு அதிர்ந்தேன். இதை அவரது தாயிடமும் கூறிக் கண்டிக்கச் சொன்னேன். அத்தாய் என்னிடம், ‘அவன் குருமடத்தில் தொடர்ந்து படிக்க விரும்பவில்லை’ என்றாள். ஆயினும் பலரிடம் ஜெபஉதவி கோரியுள்ளதையும் எடுத்துரைத்தாள். கடைசியில் பல தியானங்களுக்கு அவரை அனுப்பி அவரது மனத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. இறுதியில் அவர் ஒரு குருவானவர் ஆவதைக் காணும் பாக்கியம் அந்த அன்னைக்குக் கிடைத்தது!

விழாமல் இருக்க…
வேறொரு குருமாணவரையும் எனக்குத் தெரியும். அவரது வாழ்வில் எண்ணற்ற சிக்கல்கள் நோய்களின் வடிவத்தில் வந்த போதும் அவர் கலங்கவில்லை. ஆனால் குருத்துவ அருள்பொழிவுக்கு இனி வெறும் சில மாதங்களே எஞ்சியிருக்க அவர் தமது இறையழைத்தலைத் தூக்கி எறிந்தார். அதற்குமுன் ஒருநாள் இவரை வழியில் சந்தித்தேன். அப்போது அவரது கையில் ஒரு புத்தகம் இருந்தது. என்னப் புத்தகம், பார்க்கட் டுமே எனக்கேட்டு அதைப் புரட்டிப்பார்த்தேன். அது சர்ப்ப வழிபாட்டைப் பற்றிய புத்தகம். இதை எதற்காக நீங்கள் வாசிக்க வேண்டும் எனக் கேட்டால், சும்மா அறிந்திருக்கத்தான் என மழுப்பினார். உங்களுக்குப் படிப்பதற்கு ஏராளம் இருக்குமே; அப்படியிருக்க, இதுபோன்ற புத்தகங்களைப் படிக்க எங்கே நேரம் இருக்கிறது எனக் கேட்டுவிட்டு சென்றுவிட்டேன். பின்னர் ஒருநாள் இந்நபரைக் காணக்கூடாத இடத்தில் நண்பர்களுடன் காணநேர்ந்தது. அது முதலாம் கட்டளை மீறுதல் போல எனக்குப்பட்டது. ஏன் எனக்கேட்டால், வாழ்க்கையில் இதெல்லாம் தேவை என்ற பதில் வந்தது. என்னை விட நிறையப் படித்த அவர் என்னையே சில விஷயங்களில் நம்பும்படி ஆக்கிவிட்டார். கொஞ்சம் நாள்களுக்குப் பின் கேள்விப்பட்டேன், அந்த குருமாணவர் தமது இறையழைத்தலைத் துறந்தார் என்று.

இவ்வனுபவங்கள் எனக்கு உணர்த்துவது என்னவென்றால், கடவுளின் வார்த்தை ஆழ்கடலைப் போல் ஆழமானது. ஓர் ஆயுள் முழுவதுமே கற்றாலும் கற்றுத்தீராமல் அது கானல் நீர் போல இன்னும் அகலமாய்த் தென்படக்கூடியது. சாத்தானுக்குப் பின்னே நடந்து நேரம் போக்க இங்கே நேரம் இல்லை. அவனது சூழ்ச்சிகளைக் குறித்து நமக்கு உணர்த்துபவள் பரிசுத்த கன்னிமரியா மட்டுமே. அவளால் மட்டுமே சாத்தானின் உள்ளத்தில் அச்சத்தை விளைவிக்க முடியும். அவள் தொடக்க நூலிலும் திருவெளிப்பாட்டிலும் காணப்படுகின்றாள். அவளது பாடசாலையில் பயின்றவர்கள் மீண்டும் அலகையைத் தேடி அலைய மாட்டார்கள். அவள் நமக்கு வார்த்தை வரப்பிரசாதங்கள், கனவுகள் போன்றவற்றின் மூலம் அவனது வஞ்சனை, கண்ணிகள், சூழ்ச்சிகள், தந்திரங்கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நன்கு விளக்குவாள். தூய ஆவியும் நமக்கு உதவி செய்வார் (1யோவா. 2:25). இன்றைய இளைய தலைமுறையை வழிதவற வைப்பதற்கு ஊடகங்களைத் தான் சாத்தான் கையாளுகிறான். இப்போதைய பல திரைப்படங்கள் கிறிஸ்தவப் பெயர்களில்தான் வெளிவருகின்றன. ஆனால் அவற்றின் கருப்பொருள் சாத்தானுக்குரியதாகும். சோதனைகளில் விழுந்து விடுபவனுக்கு ஐயோ கேடு!

சாத்தான் இருக்கிறான். அவன் உங்களை அழிக்க முயல்கிறான் என பெப்ரவரி 14,1982-ல் மெட்சுகோரியா செய்தியில் அன்னை குறிப்பிட்டுள்ளாள். சாத்தானை பயப்பட வேண்டாம். நீங்கள் அஞ்சும் வகையில் அவனைப் பொருட்படுத்தவும் வேண்டாம்.

எளிமையுடனான ஜெபத்தினாலும், ஆர்வம் நிறைந்த அன்பினாலும் உங்களால் அவனைத் தோற்கடிக்க முடியும் என்கிறாள் பரிசுத்த அன்னை (பெப்ரவரி 4:1985). இறைவார்த்தை என்னும் புதையலைத் தேடி இறங்கும் பேரார்வம் உங்களுக்குள் உருவாகட்டும். அங்ஙனம் கடவுளைத் தேடும் விவேகிகளாய் நாம் மாறக்கடவோம்.

 டார்லி வற்கீஸ்

1 Comment

  1. joyson says:

    Always i like shalom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *